தாவீது அரசன் வயதானபோது, அவன் உடல் சூடு குறைந்து கொண்டே வந்தது. அவனது வேலைக்காரர்கள் அவனைப் போர்வையால் மூடினார்கள், எனினும் அவனுக்குக் குளிராய் இருந்தது.
எனவே அவனது வேலைக்காரர்கள் அவனிடம், “உங்களை கவனித்துக்கொள்ள ஒரு சிறு பெண்ணைத் தேடுவோம். அவள் உங்கள் அருகே நெருக்கமாகப் படுத்து உங்களுக்கு சூட்டினை உண்டாக்குவாள்” என்றனர்.
எனவே அரசனின் உடலில் சூடேற்றும் பொருட்டு அரசனின் வேலைக்காரர்கள் ஒரு அழகான சிறு பெண்ணை இஸ்ரவேல் நாடு முழுவதும் தேடினார்கள். அவர்கள் அபிஷாக் என்ற பெண்ணைக் கண்டுபிடித்தனர். அவள் சூனேம் நகரத்தவள். அவளை அவர்கள் அரசனிடம் அழைத்து வந்தனர்.
தாவீதிற்கும் அவனது மனைவி ஆகீத்திற்கும் அதோனியா எனும் மகன் இருந்தான். அவன் பெருமிதம் கொண்டவனாகி அவனே புதிய அரசனாக ஆவான் என்று முடிவு செய்தான். அவனுக்கு அரசனாவதில் மிகுந்த விருப்பமும் இருந்தது. எனவே அவன் ஒரு இரதத்தையும் குதிரைகளையும், முன்னால் ஓட்டிப்போக 50 ஆட்களையும் ஏற்பாடு செய்துக்கொண்டான்.
ஆனால் பலர் அதோனியாவின் செயலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அவர்கள் தொடர்ந்து தாவீதிற்கு உண்மையானவர்களாக இருந்தனர். ஆசாரியனான சாதோக்கு, யோய்தாவின் மகனான பெனாயா, தீர்க்கதரிசியாகிய நாத்தான், சீமேயி, ரேயி, தாவீதோடு இருந்த பலசாலிகள் போன்றோர் அதோனியாவுக்குச் சாதகமாக இல்லை.
ஒரு நாள், அதோனியா இன்ரோகேலுக்கு அருகிலுள்ள சோகெலெத் என்னும் மலையில் சில ஆடுகளையும், பசுக்களையும், கொழுத்த மிருகங்களையும் கொன்று சமாதானப் பலியாகக் கொடுத்தான். அவன் தன் தந்தையின் மற்ற மகன்களான சகோதரர்களையும், யூதாவிலுள்ள அதிகாரிகளையும் அழைத்திருந்தான்.
ஆனால் நாத்தான், இதைப்பற்றி அறிந்து சாலொமோனின் தாயான பத்சேபாளிடம் சென்றான். அவளிடம் அவன், “ஆகீத்தின் மகனான அதோனியா என்ன செய்துகொண்டிருக்கிறான் என்பதை அறிவீர்களா? அவன் தன்னையே அரசனாக்கிக்கொண்டான். நமது ஆண்டவனும் அரசனுமான தாவீது இதைப்பற்றி எதுவும் சொல்லாமல் இருக்கிறார்.
அரசனிடம் செல்லுங்கள். அவனிடம், ‘என் அரசனும் ஆண்டவனுமானவரே! என் மகன் சாலொமோனே அடுத்த அரசனாக வருவான் என்று என்னிடம் சத்தியம் செய்திருக்கிறீர்கள். அப்படி இருக்கும்போது அதோனியா எவ்வாறு அரசனாக வரமுடியும்?’ என்று சொல்லுங்கள்.
நீங்கள் அவரோடு பேசிக் கொண்டிருக்கும்போது, நான் அங்கே வருவேன். நீங்கள் போனபிறகு நானும் அரசனிடம் நடப்பவற்றைக் கூறுவேன். அதனால் நீங்கள் கூறியதும் உண்மையாக அவருக்குத் தோன்றும்” என்றான்.
பத்சேபாள் அவனிடம், “ஐயா உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைப் பயன்படுத்தி எனக்கு வாக்குறுதி கொடுத்துள்ளீர்கள்: ‘எனக்குப் பிறகு உன் மகனான சாலொமோனே அடுத்த அரசன். சாலொமோன் என் சிங்காசனத்தில் அமர்வான்’ என்று கூறியுள்ளீர்கள்.
அவன் சமாதான விருந்தைக் கொடுக்கிறான். அவன் சமாதான பலிக்காக பல பசுக்களையும் சிறந்த ஆடுகளையும் கொன்றிருக்கிறான். அதற்கு அவன் உங்கள் அனைத்து மகன்களையும், ஆசாரியனான அபியத்தாரையும், தளபதியான யோவாபையும் அழைத்துள்ளான். ஆனால் உங்களுக்கு உண்மையுள்ள மகனான சாலொமோனை அழைக்கவில்லை.
எனது அரசனும் ஆண்டவனுமானவரே, இப்போது உங்களை இஸ்ரவேல் ஜனங்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். உமக்குப் பிறகு அடுத்த அரசன் யார் என்பதை முடிவு செய்ய அவர்கள் உமக்காக காத்திருக்கிறார்கள்.
நீங்கள் மரிப்பதற்கு முன் ஏதாவது செய்யவேண்டும். இல்லாவிட்டால், உங்களை அடக்கம் செய்த பிறகு, அவர்களால் நானும் என் மகன் சாலொமோனும் குற்றவாளிகளாக நடத்தப்படுவோம்” என்றாள்.
பிறகு அவன், “எனது ஆண்டவனும் அரசனுமானவரே, உங்களுக்குப் பிறகு அதோனியாதான் அடுத்த அரசன் என்று நீங்கள் அறிவித்துள்ளீர்களா? இனி அதோனியாதான் ஜனங்களை ஆள்வான் என்று முடிவு செய்துவிட்டீர்களா?
ஏனென்றால் அவன் இன்று பள்ளத்தாக்குக்குப் போய், பல பசுக்களையும், ஆடுகளையும் சமாதானப் பலியாகக் கொடுத்துள்ளான். அதற்கு சாலொமோனைத் தவிர அனைத்து மகன்களையும் அழைத்துள்ளான். படைத் தலைவர்களும் ஆசாரியனான அபியத்தாரும் அழைக்கப்பட்டுள்ளனர். அவனோடு அவர்கள், உண்டும் குடித்தும் மகிழ்கின்றனர். அவர்கள், ‘அதோனியா அரசன் நீண்டகாலம் வாழட்டும்!’ என்று வாழ்த்துகின்றனர்.
எனது அரசனும் ஆண்டவனுமானவரே, நீங்கள் எங்களுக்குத் தெரியாமல் இதனைச் செய்தீர்களா? தயவு செய்து உங்களுக்குப் பிறகு யார் அரசனாவார்கள் என்பதை தெரிவியுங்கள்” என்றான்.
பின்னர் அரசன், ஒரு வாக்குக்கொடுத்தான்: “தேவனாகிய கர்த்தர்தாமே என்னை அனைத்து ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்றி இருக்கிறார். கர்த்தர் உயிருடன் இருப்பதைப் போலவே, இவ்வாக்குறுதியும் உறுதியானது.
நான் முன்பு உனக்கு ஆணையிட்டபடியே இன்று செயலாற்றுவேன், இதனை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய வல்லமையால் வாக்குறுதியளிக்கிறேன். எனக்குப் பின் உன் மகனான சாலொமோனே அரசனாவான். எனது இடத்தையும் அவன் பிடித்துக்கொள்வான். நான் எனது வாக்குறுதியை நிறைவேற்றுவேன்!” என்றான்.
பிறகு தாவீது அரசன், “ஆசாரியனான சாதோக், தீர்க்கதரிசியான நாத்தான், யோய்தாவின் மகனான பெனாயா ஆகியோரை உள்ளே வரச்சொல்” என்றான். எனவே மூன்று பேரும் உள்ளே வந்து அரசன் முன்பு நின்றனர்.
பிறகு அவனை நகர்வலம் செய்து என் சிங்காசனத்தில் வீற்றிருக்கக் கூட்டிக்கொண்டு வாருங்கள். அவனே எனது இடத்தில் அரசனாக இருப்பான். இஸ்ரவேலின் மேலும் யூதாவின் மேலும் தலைவனாக இருக்கும்படி அவனைத் தேர்ந்தெடுத்தேன்” என்றான்.
என் அரசனும் ஆண்டவனுமானவரே! கர்த்தர் உங்களோடு இருக்கிறார். இனி சாலொமோனோடும் கர்த்தர் இருப்பார் என்று நம்புவோமாக! அவனது அரசாங்கம் வளர்ந்து உங்களுடையதைவிட அதிக வலிமையுள்ளதாகும் என்று நம்புகிறேன்” என்றான்.
எனவே ஆசாரியனான சாதோக், தீர்க்கதரிசியான நாத்தான், யோய்தாவின் மகனான பெனாயா, மற்றும் அரசு அதிகாரிகள் தாவீது அரசனுக்குக் கீழ்ப்படிந்தனர். சாலொமோனை அரசனுடைய கழுதையின் மேல் ஏற்றி கீகோனுக்கு அழைத்துச் சென்றனர்.
ஆசாரியனான சாதோக் பரிசுத்த கூடாரத்தில் இருந்து எண்ணெயை எடுத்துச் சென்றான். அவனது தலையில் அதனை ஊற்றி அரசனாக அபிஷேகம் செய்தான். எக்காளம் ஊத மற்ற ஜனங்கள், “அரசன் சாலொமோன் நீண்ட காலம் வாழட்டும்!” என்று வாழ்த்தினார்கள்.
இதற்கிடையில், அதோனியாவும் அவனது விருந்தினரும் விருந்தை முடித்தனர். அவர்கள் எக்காள சத்தத்தைக் கேட்டனர். “இது என்ன சத்தம், நகரத்தில் என்ன நடக்கிறது?” என யோவாப் கேட்டான்.
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது ஆசாரியனான அபியத்தாரின் மகனான, யோனத்தான் வந்தான். அதோனியா அவனிடம், “இங்கே வா! நீ நல்லவன். நல்ல செய்தியைக் கொண்டு வந்திருப்பாய்” என்றான்.
அவனோடு ஆசாரியனாகிய சாதோக்கையும், தீர்க்கதரிசியாகிய நாத்தானையும், யோய்தாவின் மகனான பெனாயாவையும், மற்ற அரச அதிகாரிகளையும் அனுப்பினான். அவர்கள் அரசனின் கழுதை மேல் அவனை ஏற்றினார்கள்.
பின் ஆசாரியனான சாதோக்கும், தீர்க்கதரிசியான நாத்தானும் கீகோனில் அவனை அரசனாக அபிஷேகம் செய்தனர். பின் நகரத்திற்குள் வந்தனர். ஜனங்கள் அவனைப் பின்தொடர்ந்து மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இதுதான் நீங்கள் கேட்கும் சத்தம்,
அனைத்து அதிகாரிகளும் அரசர் தாவீதுக்கு வாழ்த்து சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள், ‘தாவீது அரசனே, நீ மிகப் பெரிய அரசன்! சாலொமோனையும் மிகப் பெரிய அரசனாக்கும்படி உங்கள் தேவனிடம் இப்போது நாங்கள் ஜெபம் செய்கிறோம். உங்கள் தேவன் உங்களைவிடவும் சாலொமோனைப் புகழுள்ளவனாக்குவார் என்று நம்புகிறோம். மேலும் உங்கள் அரசாங்கத்தைவிட சாலொமோனின் அரசாங்கம் பெரியதாக இருக்கும் என்றும் நம்புகிறோம்!’ ” என்று வாழ்த்தினர். அங்கே தாவீது அரசனும் இருந்தான். படுக்கையிலேயே அவன் குனிந்து வணங்கினான்.
அரசன் தாவீது, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை துதியுங்கள். என் சிங்காசனத்தில் என் மகனையே கர்த்தர் உட்காரவைத்துள்ளார். இதைத் தொடர்ந்து காண எனக்கு ஜீவனைக் கொடுத்தார்” என்று சொன்னான்.
அதோனியாவும் சாலொமோனுக்குப் பயந்தான். அவன் பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டான். [*பலிபீடத்தின்...பிடித்துக்கொண்டான் அவன் இரக்கத்துக்காக கேட்டுக்கொண்டிருந்தான் என்பதை இது காட்டியது. ஒருவன் பரிசுத்தமான இடத்துக்குள்ளே ஓடிப்போய் பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்தால் அவன் தண்டிக்கப்படக் கூடாது என்று சட்டம் இருந்தது.]
எனவே சாலொமோன், “அதோனியா தன்னை நல்லவன் என்று காட்டினால், நான் அவனது தலையிலுள்ள ஒரு மயிருக்குக்கூட தீங்குச் செய்யமாட்டேன். அவனிடம் கேடு இருந்தால், அவன் மரிக்க வேண்டும்” என்று பதில் சொன்னான்.
பிறகு சிலரை அனுப்பி அதோனியாவை அழைத்தான். அவர்கள் அவனை அழைத்துவந்தனர். அதோனியா வந்து சாலொமோனை பணிந்து வணங்கினான். அதற்கு சாலொமோன், “வீட்டிற்குப் போ” என்று சொன்னான்.